பலூன் திரை விமர்சனம் Movie Review

balloon movie review

 அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு முதலானோர் நடித்து யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வெளியாகியுள்ள ‘பலூன்’ எப்படி?

கதைக்களம்

ஜெய், அஞ்சலி கணவன், மனைவி! ஜெய் சினிமா இயக்குனராக வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். இந்நிலையில் ஊட்டியில் ஒரு வீட்டில் பேய் இருப்பதாக இணையதளம் மூலம் அறிந்துகொள்ளும் ஜெய், அந்த பேய் குறித்த தகவல்களை திரட்டி ஒரு ஹாரர் கதையை உருவாக்க முடிவெடுக்கிறார். இதற்காக மனைவி அஞ்சலி, அண்ணனின் குட்டிப் பையன் ரிஷி, நண்பர்கள் ‘யோகி’ பாபு, கார்த்திக் யோகி ஆகியோருடன் ஊட்டிக்கு பயணமாகிறார். அங்கு பேய் இருப்பதாக கூறப்படும் வீட்டுக்கு எதிரில் உள்ள பங்களாவில் தங்குகிறார்கள். இந்நிலையில் குட்டிப் பையன் ரிஷிக்கு மட்டும் அந்த வீட்டில் ஒரு குட்டிப் பெண் குழந்தை இருப்பது போன்று தெரிய வருகிறது. அத்துடன் அந்த குழந்தையுடன் ரிஷி விளையாடவும் செய்கிறார். நாளடைவில் ஜெய், அஞ்சலிக்கும் அந்த வீட்டில் ஒரு அமானுஷ்யம் நடமாடுவது தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த குட்டிப் பெண்ணின் ஆவி, ரிஷியின் உடம்பில் புகுந்து விட்டு, ஜெய்யை அப்பா என்று அழைப்பதோடு அம்மா எங்கே என்றும் கேட்கிறாள்! அந்த ஆவி ஜெய்யை அப்பா என்று அழைக்கவும், ‘அம்மா எங்கே....’ என்று கேட்கவும் என்ன காரணம் என்பதற்கான விடைகளே ’பலூனி’ன் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்


கிட்டத்தட்ட 40 ஆங்கில திரைப்படங்களை பார்த்து சுட்ட கதைதான் இந்த ‘பலூன்’ என்று இயக்குனர் சினீஷ் பகிரங்கமாக அறிவித்து எடுத்துள்ள இந்த படத்தில் சில ஆங்கில படங்களின் சாயல் இருப்பது படம் பார்ப்பவர்களால் உணர முடியும். ஆனால் அப்படி எடுத்தும் கூட ரசிகர்களுக்கு மாறுபட்ட, சுவாரஸ்யம் தரும் வகையிலான ஒரு படத்தை தருவதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் சினீஷ்!

சார்லி என்ற பலூன் வியாபாரியான ஜெய், ஜெய் தத்தெடுத்த குழந்தை மோனிகா, வேறு ஜாதியை சேர்ந்த ஜெய்யின் காதலி ஜனனி ஐயர், அரசியல் லாபத்துக்காக இவர்கள் மூவரையும் கொலை செய்யும் வில்லன் என்று விரியும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் ஓரளவுக்கு சுவராரஸ்யமாக அமைந்துள்ளது. இதை தவிர்த்து மீதி வரும் காட்சிகள் எல்லாம் நாம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்தது போன்ற உணர்வையே தருவதால் எந்த திகில் அனுபவத்தையும் இந்த ‘பலூன்’ தரவில்லை. படத்தில் ஹைலைட்டாக அமைந்திருப்பது படம் முழுக்க வரும் யோகி பாபுவின் காமெடி, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, ஆர்.சரவணனின் ஒளிப்பதிப்பில் கலர்ஃபுல்லான் காட்சி அமைப்புகள் போன்ற விஷயங்கள் மட்டும்தான்.

நடிகர்களின் பங்களிப்பு

இயக்குனராக முயற்சிக்கும் ஜெய், ஃப்ளாஷ்பேக்கில் வரும் பலூன் வியாபாரி ஜெய் என இரண்டு கேரக்டர்களை வித்தியாசப்படுத்தி நடித்துள்ள ஜெய்க்கு இது முதல் ஹாரர் படம்! ஆனால் இந்த படம் ஜெய்க்கு எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை. அஞ்சலி வழக்கம்போல அழகாக தோன்றி சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஃப்ளாஷ்பேக்கில் வரும் ஜனனி ஐயருக்கு நடிக்க அதிக ஸ்கோப் இல்லை என்றாலும் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்துடன் வெளியாகிய ‘சங்குசக்கரம்’ படத்தில் குட்டி பேயாக வந்து கலக்கிய மோனிகா, இப்படத்திலும் குட்டிப் பேயாக வந்து கலக்கியுள்ளார்! சுட்டிப் பையனாக வரும் ரிஷி, ஜெய்யின் நண்பர்களாக வரும் யோகி பாபு, கார்த்திக் யோகி, சர்ச் ஃபாதராக வரும் ஜாய் மாத்யூ, ரிஷியின் அப்பாவாக வரும் சுப்பு பஞ்சு ஆகியோரும் தங்களது பாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. பின்னணி இசைவும் ஒளிப்பதிவும்
2. யோகி பாபு சமப்ந்தப்பட்ட காமெடி காட்சிகள்

பலவீனம்

1. எந்த புதுமையும் இல்லாத கதை
2. திரைக்கதை அமைப்பு

மொத்தத்தில்...

இந்த ஆண்டு வெளியான ஹாரர் படங்கள் வரிசையில் இந்த ‘பலூனு’ம் பத்தோடு பதினொன்று என்ற வகையிலேயே இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்த ‘அவள்’ போன்ற படங்களை பார்த்து ரசித்த ரசிகர்கள் இந்த ‘பலூனை’ எப்படி வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை.

Verdict : balloon movie review

Tags : Balloon movie reviewBalloon movie,Balloon movie Jai, Anjali, Janani Iye