மதுரவீரன் விமர்சனம் Movie Review

Madura Veeran Movie Review

பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பி.ஜி.முத்தையா இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியிருக்கும் படம் ‘மதுரவீரன்’. ஜல்லிக்கட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜயகாந்த் மகன் ஷண்முகபாண்டியன் கதாநாயகனாகவும், அறிமுகம் மீனாட்சி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ‘மதுரவீரனி’ன்’ வீரமும், பாய்ச்சலும் எப்படி?
கதைக்களம்

சத்திரப்பட்டி கிராமத்தில் பெரும் மதிப்புமிக்கவர் சமுத்திரக்கனி! சுயநலம் இல்லாமல் தன் ஊர் மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்டு வரும் சமுத்திரக்கனியின் தலைமையில் தான் அவ்வூரில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிட்டு நடக்கும். தங்களுக்கும் ஊர் மக்களிடையே மரியாதையும், கௌரவமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜாதி பிரச்சனையை உருவாக்கி ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுக்கின்றனர் ‘மைம்’ கோபி மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர்! இந்நிலையில் சமுத்திரக்கனி மர்ம நபர்களால் கொல்லப்படுகிறார்! இதனைத்தொடர்ந்து சமுத்திரகனியின் சிறு வயது மகன் சண்முக பாண்டியன் மலேசியா பயணமாகிறார்! மலேசியாவில் வளர்ந்து பெரியவனாகும் சண்முக பாண்டியன் ஊருக்கு திரும்பி தன் தந்தையை கொன்றவரை கண்டுப் பிடித்து பழிவாங்க திட்டமிடுவதோடு அந்த ஊரில் நின்றுபோன ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த முயற்சி செய்ய, அவரது முயற்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதே ‘மதுரவீரன்’ படத்தின் கதைக்களம்!
படம் பற்றிய அலசல்

ஜல்லிக்கட்டுப் பின்னணியில் நடக்கும் ஜாதி பிரச்சனை, கௌரவ பிரச்சனை, சுயமரியாதை பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ள பி.ஜி.முத்தையா அதை ஓரளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளுடன் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளார். ‘ஜல்லிக்கட்டு’ என்பது விளையாட்டு, இதில் கூட ஜாதியை நுழைப்பதால் ஏற்படும் விளைவுகளை சொல்ல வந்த இயக்குனர் இன்னும் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து படமாக்கியிருக்கலாம். சமுத்திரக்கனி சம்பந்தப்பட்ட் காட்சிகள் போல் சண்முக பாண்டியன், மைம் கோபி, வேலா ராமமூர்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகளை விறுவிறுப்பாக்கியிருந்தால் ‘மதுரவீரனி’ன் வீரியமும், பாய்ச்சலும் சொல்லப்படும் விதமாக அமைந்திருக்கும்.
பதவிக்கும், சுய கௌரவத்துக்கும் ஆசைப்பட்டு ஊர் மக்கள் தெய்வமாக மதிக்கும் ஒருவரை வெட்டி சாய்ப்பதும், அந்த கொலையை மறைத்து ஊரில் ஜாதி பிரச்சனையை உருவாக்கி சுயநலம் காண துடிக்கும் ஒருவரின் முடிவு எப்படி அமைகிறது என்பதையும் உணர்வுபூர்வமான காட்சிகளாக படமாக்கியுள்ள பி.ஜி.முத்தையா, முதல் பாதியில் தந்த விறுவிறுப்பை இரண்டாம் பாதியில் தரவில்லை. ஆனால் தனது சிறந்த ஒளிப்பதிவு மூலமாகவும், சொல்ல வந்த கதையை குழப்பமில்லாமல் சொல்லியிருப்பதாலும் ‘மதுரவீரன்’ மூலம் பி.ஜி.முத்தையா ஒரு இயக்குனராகவும் கவனம் பெறுகிறார். இவரது புதிய முயற்சிக்கு சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசையும், பாடல்களும் பலம் சேர்த்திருக்கிறது. இதனால் ‘மதுரவீரன்’ பார்க்க கூடிய ஒரு படமாகவே அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயாகனாக நடித்திருக்கும் சண்முகபாண்டியன் நடிப்பு, நடனம், சண்டை காட்சிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிடும்படியாக அவரது பங்களிப்பு அமையவில்லை. அறிமுகம் மீனாட்சிக்கு கதையில் அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் நடிப்பை பொறுத்த வரையில் குறை வைக்கவில்லை. சண்முகபாண்டியனின் தந்தையாக வரும் சமுத்திரக்கனி ஏற்று நடித்துள்ள கேரக்டர் தான் படத்தின் ஜீவன்! நடிப்பிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார் சமுத்திரக்கனி! இவரது முயற்சிகளுக்கெலாம் முட்டுக் கட்டை போடும் கேரக்டர்களில் நடித்துள்ள ’மைம்’ கோபி தனது வழக்கமான நடிப்பை வழங்கியுள்ளர் என்றால், வேலா ராமமூர்த்தி பெரும்பாலான படங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பை தான் தருகிறார். மற்றும் பதவி வெறி பிடித்தவராக வரும் தேனப்பன், சமுத்திரக்கனிக்கு விசுவாசமானவராக வரும் மாரிமுத்து ஆகியோர் ஏற்றுள்ள பாத்திரங்களும் கவனம் பெறும் விதமாக அமைந்துள்ளது. சண்முகபாண்டியனின் நண்பராக வரும் பாலசரவணனின் டைமிங் காமெடிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. ‘கபாலி’ ரஜினி கெட்-அப்பில் வந்து அலப்பறை செய்யும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் கதையுடன் ஒட்டவில்லை என்றாலும் ஓரளவுக்கு சிரிக்க வைக்க உதவியுள்ளது.

பலம்

1.ஆக்‌ஷன் காட்சிகள்

2. ஒளிப்பதிவு, பின்னணி இசை

3. சில காமெடி காட்சிகள்

பலவீனம்

1 .கமர்ஷியல் விஷயங்கள்

2. புதுமையில்லாத காட்சி அமைப்புகள்

மொத்தத்தில்…

ஜல்லிகட்டு பின்னணியில் நடக்கும் ஜாதி அரசியலை இதுவரையில் யாரும் படமாக்க முன் வராத நிலையில் அந்த பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

Verdict : ‘மதுரவீரனி’டம் வீரியமும், வேகமும் குறைவு என்றாலும் வரவேற்கத்தக்க முயற்சி!

Tags : Madura veeran, Madura veeran teaser, Madura veeran trailer, Madura veeran official teaser, Madura veeran official movie, Jallikattu movie, Jallikatu protest, Jallikattu marina protest, Madura veeran new movie, Samuthrakani madura veeran, Madura veeran samuthrakani movie, Jallikattu videos, Madura jallikattu video