உள்குத்து – விமர்சனம் Movie Review

Ulkuthu Movie Review

‘திருடன் போலீஸ்’ படத்தில் இணைந்த இயக்குனர் கார்த்திக் ராஜு, நடிகர்கள் ‘அட்டகத்தி’ தினேஷ், பாலசரவணன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘உள்குத்து’. இவர்களது ‘உள்குத்து’ எப்படி அமைந்துள்ளது?

கதைக்களம்

அப்பா, அம்மாவை இழந்த ‘அட்டகத்தி’ தினேஷ், தன் அக்கா சாயா சிங்குடன் கோயில் வாசலில் பூ வியாபாரம் செய்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். சாயா சிங்கின் கணவர் ஜான் விஜய், பெரிய ரௌடியும், கந்துவட்டி தொழில் செய்து வருபவருமான சரத் லோகித்ஷாவிடம் கந்துவட்டி வசூலிப்பவராகவும், அடியாளாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் கந்துவட்டி வசூல் விஷயத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட, லோகித்ஷ்வா தம்பியும், ரௌடியுமான திலீப் சுப்பராயன் ஜான் விஜய்யையும், அவரது மனைவி சாயா சிங்கையும் கொலை செய்து விடுகிறார். தன் அக்காவையும், அக்கா புருஷனையும் கொலை செய்த சரத் லோகித்ஷா மற்றும் திலீப் சுப்பராயனை பழிவாங்க திட்டமிடும் தினேஷ், அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மீனவர் குப்பத்துக்குள் புகுந்து, சரத் லோகித்ஷா மற்றும் திலீப் சுப்பராயனின் விசுவாசத்தை பெற்று அவர்களது அடியாளாக மாறுகிறார்! ஒரு அடியாளராக இருந்து எப்படி தினேஷ் புத்திசாலித்தனமாக சரத் லோகித்ஷா மற்றும் திலீப் சுப்பராயனை வீழ்த்துகிறார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

படம் பற்றிய அலசல்

இப்பட,ம் மூலம், ‘கந்துவட்டி தொழிலில் வட்டியை வசூலிக்கும் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது?’ என்ற கருத்தை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு! ஆனால் அந்த விஷயத்தை மையப்படுத்தி காட்சிகளை அமைத்து படமாக்காமல், அடிதடி, வெட்டு, குத்து கொலை என்று ரௌடிகளுக்குள் நடக்கும் வழக்கமான விஷயங்களையே மையப்படுத்தியுள்ளார்! இருந்தாலும் எடுத்துகொண்ட திரைக்கதைக்குள் சில ட்விஸ்டுகளையும், யூகிக்க முடியாத சில காட்சிகளையும் அமைத்து படத்தை ஓரளவுக்கு விறுவிறுப்பாக படமாக்கியிருப்பதால் ‘உள்குத்து’ போரடிக்கவில்லை. குப்பத்துக்கு வந்ததும் நண்பராகும் ‘சுறா சங்கர்’ பாலசரவணனின் தங்கை நந்திதா மீது தினேஷ் காதல் கொண்டு காதலும் மோதலுமாக பயணிக்கும் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை தந்தாலும், இரண்டாம் பாதியில் லோகித்ஷா, திலீப் சுப்பராயனை தினேஷ் பழிவாங்க துவங்கும் படலத்திலிருந்து படம் சூடு பிடிக்கிறது. தங்கள் கோட்டைக்குள் புகுந்து யார் ‘உள்குத்து’ குத்துகிறார் என்று தெரியாமல் லோகித்ஷாவும், திலீப் சுப்பராயனும் தவிக்கும் காட்சிகளை வித்தியாசமாக அமைத்த இயக்குனர், அடிதடி காட்சிகளை குறைத்து சொல்ல வந்த கதையை இன்னும் விரிவாக சொல்லியிருந்தால் ‘உள்குத்து’ குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமைந்திருக்கும். கடலையும், கடல் சார்ந்த பகுதிகளையும் பி.கே.வர்மா தனது கேமராவால் அழகாக படம் பிடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை என்றாலும் பின்னணி இசையில் குறை வைக்கவில்லை ஜஸ்டின்! கே.எல்.பிரவீனின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு!

‘அட்டகத்தி’ தினேஷ் இப்படத்தில் காதல், அடிதடி, ஆக்‌ஷன் என்று ஒரு முழுநீள ஹீரோவாக புரொமோஷன் பெற்றுள்ளார். சரத் லோகித்ஷாவின் அடியாட்களை புரட்டி எடுக்கும் ஆரம்ப காட்சி, நந்திதா மீது தினேஷுக்கு மெதுவாக உருவாகும் காதல், என்று தினேஷின் சிறந்த நடிப்பை குறிப்பிடும் விதமாக படத்தில் நிறைய காட்சிகள் உள்ளன. அடக்கமான குப்பத்து பெண்ணாக வரும் நந்திதாவும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ‘சுறா சங்கர்னா சும்மாவா’ என்று அடிக்கடி வசனம பேசி குப்பத்து ரௌடியை போன்று ‘கெத்து’ காட்டி பாலசரவணன் செய்யும் காமெடிகள் படத்திற்கு பெரிய ப்ளஸ்ஸாக அமைந்துள்ளது. சரத் லோகித்ஷாவை ஒரே மாதிரி வில்லனாக பார்த்து பார்த்து சலித்து விட்டது என்றாலும், ‘கபடி’ விளையாடியபடியே அவர் எதிரிகளை தீர்த்துகட்டும் கொடூர வில்லனாக மனதில் நின்று விடுகிறார். திலீப் சுப்பராயனும் வில்லனாக அதகளம் பண்ணியிருக்கிறார். தினேஷின் நண்பராக வரும் பாலசரவணன், மைத்துனராக வரும் ஜான் விஜய், இவரது நண்பராக வந்து ரௌடிகளை வீழ்த்த, தினேஷுக்கு வியூகம் அமைத்து கொடுக்கும் ஸ்ரீமன், சாயா சிங் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரையும் சரியாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர்! குப்பத்து தலைவராக வரும் ஷெஃப் தாமோதரனும் நடிப்பில் கவனம் பெறுகிறார்!
பலம்

1. தினேஷ், பாலசரவணன் கேரக்டர்கள்
2. படத்தில் வரும் சில ட்விஸ்ட்கள்

பலவீனம்

1 கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
2. அதிகபடியான அடிதடி வன்முறை காட்சிகள்

மொத்தத்தில்

இதுவரை அதிகமாக யாரும் சொல்லாத கந்துவட்டி தொழில் சார்ந்த ஒரு கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை விரிவாக சொல்வதில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார் என்றாலும் சில ட்விஸ்ட்கள், பாலசரவணன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் என படத்தை ஓரளவுக்கு ரசிக்கும்படி தந்திருப்பதால் ‘உள்குத்து’க்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Verdict : கந்துவட்டி தொழிலால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனின் ‘உள்குத்து’ போராட்டம்!

Tags : Ulkuthu Movie Review,உள்குத்து,Dinesh, Nandita Swetha, Bala Saravana