வேலைக்காரன் திரை விமர்சனம் Movie Review

Velaikkaran Movie Review

‘தனி ஒருவன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனை மோகன்ராஜா இயக்குகிறார் என்றதுமே ‘வேலைக்காரன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு உயர்ந்தது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறார்களா?

கதைக்களம்

பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ்வாக வேலை செய்கிறார் சிவகார்த்திகேயன். அதே கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனஜராக இருக்கிறார் ஃபஹத் ஃபாசில். ஒரு சூழ்நிலையில், தான் வேலை பார்க்கும் கம்பெனியில் தயாராகும் எந்தப் பொருளும் அரசு விதிகளுக்கு உட்பட்டு தயாராவதில்லை, அதனால் மக்களின் உடல்நலன் பெரிய பாதிப்புக்குள்ளாகிறது என்பதை கண்டுபிடிக்கிறார். ஒட்டுமொத்தமாக இதுபோல் நடக்கும் எல்லாவிதமான கலப்படங்களையும் கலைவதற்காக சிவகார்த்திகேயன் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் ஈடுபடுகிறார். ஆனால், அதற்கு முட்டுக்கட்டையாக மாறுகிறார் ஃபஹத் ஃபாசில். சிவகார்த்திகேயன் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறார்? அதனை ஃபஹத் ஏன் எதிர்க்கிறார்? முடிவு யாருக்கு சாதகமாக அமைகிறது என்பதே இந்த ‘வேலைக்காரன்’.

படம் பற்றிய அலசல்

அவசியம் பேசப்பட வேண்டிய ஒரு முக்கியப் பிரச்சனையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் மோகன் ராஜா. அதற்காக அவருக்கு ஒரு தனி பாராட்டு! வழக்கமாக இதுபோன்ற சமூகக் கருத்துக்களை பேசும் படங்களில் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைக்கும்போது, கமர்ஷியல் விஷயங்களுக்காக காமெடி, காதல், சண்டை, தேவையில்லாத பாடல் என பல விஷயங்களை வலிந்து திணிக்க வேண்டிய சூழல் உருவாகும். அதனை பெரும்பாலும் தவிர்த்துவிட்டு கதையின் போக்கிலேயே சுதந்திரமாக படமாக்கியிருக்கிறார் மோகன் ராஜா.

வலுவான கதைதான் என்றாலும், அதனை இரண்டரை மணி நேரம் அமர்ந்து ரசிக்கும்படியான ஒரு திரைக்கதையாக மாற்றுவதில் சற்றே சறுக்கியிருக்கிறது ‘வேலைக்காரன்’ டீம். குறிப்பாக முதல்பாதியைவிட, இரண்டாம்பாதி சற்று நீளமான படம் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. அதற்கு முக்கியக் காரணம், படம் நெடுக நிறைய சமூக வசனங்களை பேசிக்கொண்டே இருப்பதுதான். முடிந்தளவுக்கு கொஞ்சம் வசனங்களைக் குறைத்துவிட்டு காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யப்படுத்த முயன்றிருந்தால் இன்னும்கூட கூடுதல் கவனம் பெற்றிருக்கும். அனிருத்தின் பாடல்களை சரியாகப் பயன்படுத்வதற்கான சூழல் கதையோட்டத்தில் இல்லை. பின்னணி இசையிலும் பெரிய அளவில் அனிருத் வசீகரிக்கவில்லை. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சேரிப்பகுதி செட்டில் கடும் உழைப்பு தென்பட்டாலும், கதையின் பங்களிப்பில் அதற்கு பெரிய வேலை இருப்பதாகத் தெரியவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி போன்ற விஷயங்களைத் தவிர்த்துவிட்டு முழுநேர சீரியஸ் ஹீரோ கேரக்டர் சிவகார்த்திகேயனுக்கு. அறிவு கேரக்டருக்கு தன்னால் முடிந்தளவுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் சிவா. குறிப்பாக பெரிய பெரிய வசனங்களை அசால்ட்டா பேசித்தள்ளியிருக்கிறார். வழக்கமான சிவகார்த்திகேயனை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு சற்று ஆச்சரியமே வரும். ஆதி கேரக்டரில் ஃபஹத்தை நடிக்க வைத்தது புத்திசாலித்தனமான முடிவு. சின்னச் சின்ன முகபாவனைகள் மூலமே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார். நிச்சயமாக அவருக்கான தமிழ் அறிமுகம் சிறப்பாகவே நடந்திருக்கிறது. நயன்தாராவின் கதாபாத்திரம் படத்தின் கதையோட்டத்திற்கு பெரிய பங்களிப்பு செய்யவில்லை. அழுத்தமான காதலே, அல்லது எமோஷனோ நயனுக்குக் கொடுக்கப்படாததால் பெரிய அளவில் அவரால் ஸ்கோர் செய்ய முடியவில்லை. காசி கேரக்டரில் வழக்கம்போல் மிரட்டியிருக்கிறார் பிரகாஷ் ராஜ். ஷரத் லோஹிதாஷாவுக்கு வழக்கமான ரவுடி கேரக்டர். ரோபோ சங்கர், சதீஷ் ஒன்றிரண்டு இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, சார்லி, காளி வெங்கெட், ராம்தாஸ், மன்சூர் அலிகான் சீரியஸாக வந்துபோகிறார்கள்
பலம்

1. அவசியம் பேசப்பட வேண்டிய கதைக்களத்தை படமாக்கியிருப்பது
2. சிவகார்த்திகேயன் + ஃபஹத் ஃபாசில்
3. ஒளிப்பதிவு


பலவீனம்

1. வசனங்கள் மூலமாகவே காட்சிகளை நகர்த்த முயன்றிருப்பது

2. பின்னணி இசை

3. சில முக்கிய கதாபாத்திரங்களின் வடிவமைப்பு

மொத்தத்தில்...

பொழுதுபோக்கு விஷயங்களை சமரசம் செய்துவிட்டு, சொல்ல வந்த விஷயத்தை சீரியஸாகவே அணுகியிருக்கிறது ‘வேலைக்காரன்’ டீம். சொல்லியவிதத்தில் ஆங்காங்கே சிற்சில குறைகள் இருந்தாலும், பேசப்பட்டிருக்கும் நல்ல விஷயத்திற்காக ‘வேலைகாரனை’ வரவேற்கலாம்.

Verdict : கமர்ஷியல் ‘கலப்படம்’ தவிர்க்க முயன்றிருக்கும் கருத்துப் படம்!

Tags : வேலைக்காரன் திரை விமர்சனம்,Velaikkaran Movie Review,Velaikkaran Movie, Sivakarthikeyan, Fahadh Faasil, Nayanthara, Prakash Raj, Sneh