நான் செயல்படாத தலைவரா? தஞ்சையில் ஸ்டாலின் ஆவேசம் India News

Am I inactive? Stalin at Tanjai

''முதல்வர் பழனிசாமி, என்னை, செயல்படாத தலைவர் என விமர்சனம் செய்துள்ளார். செயல்படாத தலைவராகவே இருந்து விட்டு போகிறேன். ஆனால், உங்களை போல் எடுபிடி முதல்வராக இருக்க மாட்டேன்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்லத் திருமண விழா, தஞ்சாவூரில் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி, என்னை, செயல்படாத தலைவர் என விமர்சனம் செய்துள்ளார். செயல்படாத தலைவராகவே இருந்து விட்டு போகிறேன். ஆனால், உங்களை போல், எடுபிடி முதல்வராக இருக்க மாட்டேன்.
மத்திய அரசுக்கு அடிமையாகி, தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில், எல்லாருக்கும் ஒப்புதல் உண்டு. எட்டு வழிச்சாலை திட்டத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. அந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தால், உங்களுடன் சேர்ந்து, இத்திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருகிறேன்.

டி.ஆர்.பாலு, மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சராக இருந்த போது, லஞ்சம் வாங்கியதாக முதல்வர் கூறுகிறார். இது உண்மை என்றால், முதல்வருக்கு தைரியம் இருந்தால், அவர் மீது வழக்கு தொடரட்டும். அதை சந்திக்க, தயாராக உள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மகன் தலைமையை பறித்தாரா?

திருமண விழாவில் வரவேற்று பேசிய உதயநிதி, தன் தலைமை பொறுப்பை ஸ்டாலின் தட்டி பறித்து விட்டதாகவும், பத்திரிகையில் தன் பெயர் தான், தலைமை என, இருந்ததாகவும் பேசினார். 

இதில் பதில் அளித்து, ஸ்டாலின் பேசியதாவது: வரவேற்புரை ஆற்றிய உதயநிதி, அவருக்கு வழங்கப்பட்ட தலைமைப் பொறுப்பை, நான் பறித்துக் கொண்டதாக ஏக்கத்தோடு தெரிவித்தார். எனக்கு வழங்கப்பட்டுள்ள தலைமைப் பொறுப்பை, யாராலும் தட்டிப் பறிக்க முடியாது. 

நான் வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், அன்பில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நான் வர இயலாத காரணத்தால், உதயநிதி பெயரை தலைமைப் பொறுப்பிலே இணைத்து நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். ஆனால், நான் மேற்கொள்ளவிருந்த அந்தப் பயணத்தை ஒத்திவைத்து, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அதனால், உதயநிதி தவறாக கருத வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Stalin, Stalin at Tanjai, Stalin is inactive, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம், முதல்வர் பழனிசாமி, Tamil Nadu CM, தஞ்சையில் ஸ்டாலின் ஆவேசம், ஸ்டாலின் ஆவேசம், ஸ்டாலின்