ஈராக்கில் பெரும்பான்மை இல்லாத நிலையில் மதகுரு மக்தாதா தலைமையில் கூட்டணி ஆட்சி World News

Cleric Sadr meets Iraq PM Abadi, hinting at coalition

ஈராக் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வென்ற மதகுரு மக்தாதா பதே கட்சி தலைவர் ஹைதி அல்-அம்ரி உடன் கூட்டணி ஆட்சியை அமைக்கிறார். #Iraq

ஈராக்கில் சதாம் உசேன் வீழ்ச்சிக்கு பிறகு அங்கு ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இந்த நிலையில் திடீரென ஐ.எஸ். தீவிரவாதிகள் எழுச்சி பெற்று பெரும் பகுதியை கைப்பற்றி தனிநாடு அமைத்தனர். 

தினமும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். எனவே அமெரிக்க கூட்டுப் படையின் உதவியுடன் கடந்த டிசம்பரில் அவர்கள் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

அதைதொடர்ந்து ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதில் மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு மக்தாதா சதாரின் கூட்டணியும், பதே கட்சி கூட்டணியும் மோதின.

இந்த தேர்தலில் 44.5 சதவீதம் வாக்குகள் பதிவாகிய நிலையில், ஓட்டு எண்ணிக்கையில் மதகுரு மக்தாதா தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது. இவருக்கு அடுத்தபடியாக பதே கட்சி 47 இடங்கள் வந்துள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் அபாடி தலைமையிலான நசார் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இக்கட்சி 42 இடங்கள் பிடித்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காத நிலையில், அங்கு தொங்கு பாராளுமன்றம் அமைந்தது. இதனால், அதிக இடங்களில் வென்ற மக்தாதா, கூட்டணி ஆட்சியமைக்க முடிவு செய்து அதற்கான பணியில் இறங்கினார்.

பதே கட்சித்தலைவர் ஹைதி அல்-அம்ரியுடன் நடத்தப்பட்ட பல தரப்பு பேச்சுவார்த்தையில் ஆட்சியமைக்க உடன்பாடு எட்டப்பட்டது. மேலும், ஹைதி அல்-அம்ரியுடன் உடன் மக்தாதா சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து, கூட்டாக பேட்டியளித்த அவர்கள் ஈராக்கில் கூட்டணி ஆட்சியமைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்றாலும் மதகுரு மக்தாதா சதார் பிரதமராக முடியாது. ஏனெனில் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. இவர் ஷியா பிரிவு தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்தார். 

இதனால் இவர் அமெரிக்காவின் நீண்டகால எதிரி ஆவார். மக்தாதா பிரதமராக முடியாவிட்டாலும் புதிய அரசு அமைவதில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : iraq,coalition government,Cleric Sadr,Abadi,ஈராக்,பாராளுமன்ற தேர்தல்,அல் அபாடி,மதகுரு மக்தாதா,கூட்டணி ஆட்சி