மோடியின் பேரன் ராகுல்காந்தி - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு India News

Dindigul Sreenivasan said Rahul Gandhi in grandson of Modi

பிரதமர் மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. #DindigulSreenivasan #RahulGandhi

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அணியாகவும், அவரது பேரன் ராகுல்காந்தி ஒரு அணியாகவும் போட்டியிடுகின்றனர். இரு துருவங்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஓட்டு வேட்டை நடக்கிறது.

தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி அ.தி.மு.க. என்று தெரிந்ததால்தான் பா.ஜனதா எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. நாட்டில் இன்றைய நிலையை கருதி பா.ம.க. எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்றது போல இந்தமுறையும் எங்களால் தனித்து நின்று வெற்றி பெற முடியும். எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காக கூட்டணி அமைத்துள்ளோம். 

இவ்வாறு அவர் பேசினார்.

மோடியின் பேரன் ராகுல்காந்தி என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதால் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து தனது பேச்சை பேசிக் கொண்டே இருந்தார்.

இதற்கு முன்பு நடந்த பல கூட்டங்களிலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையான கருத்துகளை கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் என்றும், ஜெயலலிதாவுக்கு சசிகலா வி‌ஷம் வைத்து கொன்று விட்டார் என்றும், அப்பல்லோலில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் பொய் சொன்னோம் என்றும், மக்களவை துணை சபாநாயர் தம்பிதுரை தமிழக கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரசிம்மாராவிடம் மனுகொடுத்துள்ளார் என்றும் தொடர்ந்து பலவிதமான சர்ச்சை பேச்சுகளை பேசி வந்தார். பாராளுமன்ற தேர்தலுக்காக தினசரி பிரசாரத்துக்கு சென்று வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று என்ன பேச போகிறார் என கட்சியினரும் செய்தியாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். #DindigulSreenivasan #RahulGandhi 

Tags : Dindigul Sreenivasan, Rahul Gandhi, Modi, மோடி, ராகுல்காந்தி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்