அ.தி.மு.க. அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்- எ.வ.வேலு பேச்சு India News

EV velu speech People have been ready to throw up admk government

அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

விருதுநகர் தேசப்பந்து திடலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்களும், எம்.எல்.ஏ.க்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ. வேலு பங்கேற்று பேசியதாவது:-

தமிழக அரசு ஒரே நாள் இரவில் பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டது. சம்பாதிப்பதற்காக பஸ்சில் சென்ற மக்கள் இன்று பஸ்சில் செல்வதற்காகவே சம்பாதிக்கச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

போக்குவரத்துக் கழகத்தில் நஷ்டம் ஏற்பட்டால் மாநில அரசு தான் அதனை சரிப்படுத்த வேண்டும். ஆனால் அந்த நிதிச்சுமையை மக்கள் தலையில் அரசு சுமத்துகிறது.

போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் கிடைத்த போது அதனை மக்களுக்கு கொடுத்தார்களா?

எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாதவர் தான் தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். போக்குவரத்துக்கழக நிர்வாகம், கணக்கு வழக்கு ஆகியவற்றை அவர் எப்படி மேற்கொள்வார்?

போக்குவரத்துக்கழகம் என்பது நஷ்டக்கணக்கு பார்ப்பதற்கு அல்ல, மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டது தான்.

போக்குவரத்துக் கழகத்தை சீர்படுத்தவும், கட்டணத்தை குறைக்கவும் 27 பரிந்துரைகளை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளார். அதை அவர் படிக்கக்கூட இல்லை. எதிர்க்கட்சிகள் கருத்தை கூட எடப்பாடி பழனிசாமி கேட்க தயாராக இல்லை.

கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்திருந்தால் இதில் எதை செய்யலாம்? எதை செய்ய முடியாது? என்பதை உடனே கூறி இருப்பார்.

ஜி.எஸ்.டி. வரி அமல் படுத்தியதற்கு கவர்னர் தனது உரையில் அரசை பாராட்டுகிறார். எந்த நாட்டிலும் இந்த அளவு ஜி.எஸ்.டி. வரி உயர்வு இல்லை.

மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் ஆகிய எந்த நாட்டிலும் 10 சதவீதத்திற்கு மேல் வரி கிடையாது. இங்கு தான் 28 சதவீத வரி உள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கோடிக் கணக்கான ரூபாயை செலவு செய்கின்றனர். எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் 40 ஆண்டுகால நண்பர். எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு வரி கூட பேசுவதில்லை.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது அரசு அழைப்பிதழில் எம்.ஜி.ஆர். படம் போடப்படுவது கிடையாது.

பெருந்தலைவர் காமராஜருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்தால் ஏழை மக்களுக்கு அவர் செய்த கல்விச்சேவை நினைவுக்கு வரும். எம்.ஜி.ஆர். சிலையை பார்த்தால் அவர் ஏழை மக்களின் பசியை போக்கியது நினைவுக்கு வரும்.

சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்றனர். அதன்படி ஜெயலலிதா குற்றவாளி, அவர் தற் போது இருந்திருந்தால் பெங்களூர் சிறையில் தான் இருந்திருப்பார்.

அவரது உருவப்படத்தை மரபை மீறி சட்டசபையில் திறந்து வைத்திருக்கிறார்கள். இதனை வருங்காலத்தில் பார்க்கும் போது எது நினைவுக்கு வரும்? என்பது உங்களுக்கே தெரியும்.

இந்த அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். அதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப் பாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜா சொக்கர், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப்பொதுச் செயலாளர் ஆற்றலரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர் அப்துல் மஜித், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செய லாளர் முகமது கவுஸ் உள் பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். #tamilnews

Tags : attamil,tamilnews,indianews,ev velu, admk govt, dmk, edappadi palanisamy, அ.தி.மு.க. அரசு, எ.வ.வேலு பேச்சு, எடப்பாடி பழனிசாமி, முகஸ்டாலின்