ஹபீஸ் சயீத் புதிய அரசியல் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுப்பு World News

Hafiz Saeed backed party barred from taking part in Pakistan elections

மும்பை தாக்குதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் தொடங்கியுள்ள அரசியல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. #HafizSaeed

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத், ஜமாஅத் உத் தாவா என்னும் அமைப்புக்கு தலைமை தாங்குவதுடன் மில்லி முஸ்லிம் லீக் என்ற புதிய அரசியல் அமைப்பை ஆரம்பித்து வரும் 25-ம் தேதி நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தீர்மானித்தான்.

அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடணப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீதின் கட்சியை அங்கீகரிக்க பாகிஸ்தான் தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. இந்த முடிவுக்கு எதிராக ஹபீஸ் சயீத் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் ஜூலை மாதம் 25-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கீகரிக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

எனினும், அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் என்னும் கட்சியை கேடயமாக பயன்படுத்தி தனது ஜமாஅத் உத் தாவா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த வேட்பாளர்களை இந்த தேர்தலில் களமிறக்க ஹபீஸ் சயீத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

எஹ்சான் என்பவர் அல்லாஹூ அக்பர் தெஹ்ரீக் கட்சியை பதிவு செய்துள்ளார். இந்த கட்சிக்கு அந்நாட்டு தேர்தல் ஆணையம் நாற்காலியை சின்னமாக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : hafiz Saeed,mumbai attack,Pakistan elections,ஹபீஸ் சயீத்,மில்லி முஸ்லிம் லீக்,பாகிஸ்தான் தேர்தல்,மும்பை தாக்குதல்