இல்லந்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து India News

MK Stalin Extends His Greetings On The Occasion Of Pongal

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டு மக்களுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #PongalFestival #Pongal2018


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து மடல் வருமாறு:-

​எத்தனையோ விழாக்கள் வருகின்றன. மகிழ்ச்சி தருகின்றன. எனினும், பொங்கல் திருநாளில் மகிழ்ச்சியுடன், பெருமிதமும் கலந்திருக்கிறது. காரணம், இது தமிழர்களின் தனித்துவமான விழா.

தமிழர் திருநாள் என்பதுடன், தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. உழைப்பின் உயர்வினை உலகுக்கு உரைத்திடும் அறுவடைத் திருநாளாகவும், அந்த உயர்வுக்கு உற்ற துணையாக நிற்கும் இயற்கைக்கும் கால்நடைகளுக்கும் இதயபூர்வ நன்றி தெரிவிக்கும் உழவர் திருநாளாகவும் திகழ்ந்திடும் பொங்கல் நன்னாளை, தமிழினத்தின் ஆதிப் பழம்பெருமையை மீட்டெடுக்கும் விழாவாக, பண்பாட்டு மடை மாற்றம் ஏற்படுத்தியதில் திராவிட இயக்கத்தின் பங்கு மகத்தானது.

கழகத்தினரைப் பொறுத்தவரை, பொங்கல் விழா என்பது தமிழர் திருநாள் தமிழ்ப் புத்தாண்டு திராவிட இனத்தின் பண்பாட்டுத் திருவிழா. அந்த உணர்வுடன்தான் அன்றுதொட்டு இன்றுவரை பொங்கல் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.

​இந்தப் பொங்கல் நன்னாளில், கழகத்தின் பொதுச்செயலாளர் நமது இனமானப் பேராசிரியர் அவர்கள் அன்புக்கட்டளை ஒன்றை விடுத்திருக்கிறார். தமிழர் திருநாளையும், தமிழ்ப் புத்தாண்டையும் இணைத்துக் கொண்டாடும் கழகத்தினர், இரு வண்ணக் கொடியாம் நம் கழகக் கொடியை உயர்த்திட வேண்டும் என்பதே பேராசிரியர் அவர்கள் விடுத்துள்ள அன்புக் கட்டளை.

எனவே, பொங்கல் திரு நாளை தமிழர் திருநாளாக, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி, பண்பாட்டு மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்த கழகத்தையும் தலைவர் கலைஞரையும் மறவாமல், வட்டங்கள் தோறும் வீடுகள் தோறும் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றிடுவோம்.

காற்றில் அந்தக்கொடி அசையும்போது தமிழ் உணர்வு நம் நெஞ்சமெல்லாம் பரவி நிறையட்டும்! தமிழ் நிலத்தைக் காக்கவும், தமிழினத்தை மீட்கவும் தமிழ் மொழிப்பெருமைகளைப் போற்றவும், அடுத்தடுத்து கழகம் பெறவிருக்கும் வெற்றிக்குக் கட்டியம் கூறுவது போல கழகக் கொடிகள் உயரட்டும்.

இல்லம்தோறும் இன்ப பொங்கல் பொங்கட்டும். இருவண்ணக் கொடி பறக்கட்டும். ​அனைவர்க்கும் எனது நெஞ்சார்ந்த இனிய பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #PongalFestival #Pongal2018 #MKStalin #tamilnews

Tags : Pongal festival, pongal, MKStalin, பொங்கல், மு.க.ஸ்டாலின் வாழ்த்து,attamil,tamilnews