பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் சாதனை - கிராமங்களில் விஸ்வாசம் படத்திற்கு வரவேற்பு Cinema News

Petta Viswasam First Day collection

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியிருக்கும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. #Petta #Viswasam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படமும் நேற்று முன்தினம் வெளியானது.

இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்ததால் பலத்தபோட்டி ஏற்பட்டது. ரஜினி, அஜித் ரசிகர்கள் இதனை திருவிழா போல கொண்டாடி மகிழ்ந்தார்கள். சில இடங்களில் மோதலும் நடைபெற்றது.

தொடர்ந்து 2 படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி-அஜித் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் பற்றி வினியோகஸ்தர்கள் தரப்பில் கூறியதாவது:- இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது.

சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.

சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம். இங்கே பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும்.

தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது.

விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட படம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ படம் இதுவரை 83 ஆயிரம் டாலர்கள் தான் வசூல் செய்துள்ளது.

‘பேட்ட’ படத்தின் ஓடும் நேரம் 2 மணி 51 விநாடிகள். எனவே அதிக காட்சிகள் திரையிட முடியாது. இடைவேளை எல்லாம் விட்டு, ஒரு காட்சி முடியவே குறைந்தது மூன்றரை மணி நேரமாகும். இதனால், குறைவான காட்சிகளே திரையிட இயலும். இரண்டாவது நாளில் இருந்து பேட்ட படத்துக்கு கூடுதலாக 100 திரைகள் கிடைத்து இருக்கின்றன.

எனவே பேட்ட வசூல் இனிதான் அதிகரிக்கும். தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது.

பல திரையரங்குகளில் சீட்கள் போக சேர்கள் போட்டு ரசிகர்களை அமர வைக்கிறார்கள். அந்த அளவுக்கு கூட்டம் உள்ளது. ஜனவரி 16-ந் தேதிக்கு பிறகு எந்த படம் லாபகரமாக இருக்கும் என்பதை சரியாக கூறிவிடலாம்.

இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதிகபட்சம் தமிழகத்தின் இறுதி வசூலில் ஒரு படம் 20 சதவீதம் குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளது.’

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #Petta #Viswasam #Rajinikanth #AjithKumar

Tags : Petta, Viswasam, Rajinikanth, Ajith Kumar, Petta 1st day collection, Viswasam 1st day Collection, பேட்ட, விஸ்வாசம், ரஜினிகாந்த், அஜித் குமார், பேட்ட வசூல், விஸ்வாசம் வசூல்