அதிகாரிகள் எழுதி தருவதை படிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி- ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு India News

RS bharathi accusation to chief minister edappadi palanisamy

சுயமாக பேசகூட தெரியாமல் அதிகாரிகள் எழுதி தருவதை படிக்கும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டி பேசினார். #rsbharathi #edappadipalanisamy

தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., (மேற்கு), செந்தில்குமார் எம்.எல்.ஏ., (கிழக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர்.

காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அப்துல்கனிராஜா (கிழக்கு), சிவசக்திவேல் (மேற்கு), மாநகர தலைவர் சொக்கலிங்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், சி.பி.எம். சச்சிதானந்தம், சி.பி.ஐ. மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் அன்பரசு, ஜான்சன் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:-

தமிழக சட்டசபையில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் வரும் 28-ந் தேதி தீர்ப்பு வர உள்ளது. இந்த தீர்ப்பால் 18 எம்.எல்.ஏ.களும் மீண்டும் சட்டசபைக்குள் வருவது உறுதி. இவர்கள் சட்டசபைக்கு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்பது கூட உறுதியாக தெரியாது. ஆட்சியை தக்க வைக்க ஒவ்வொரு எம்.எல்.ஏ.விடமும் ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டுபஸ் வழித்தடம் வழங்கி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து நான்தான் வழக்குபோட்டேன். நான் போட்ட எந்த வழக்குமே தோற்றதில்லை. எனவே மே மாதம் நிச்சயம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும். தி.மு.க. ஆட்சி காலத்தில் பஸ் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தியபோதுகூட பஸ் கட்டணத்தை கருணாநிதி உயர்த்தவில்லை.

ஆனால் தற்போது உள்ள அரசு மக்களை பற்றி சிந்திக்காமல் பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு நிர்வாக திறமை கிடையாது. அதிகாரிகள் எழுதி தருவதை படித்துக்கொண்டும் அவர்கள் சொல்வதை கேட்டும்தான் ஆட்சி நடத்தி வருகிறார்.

ஆர்.கே.நகர் தேர்தல் எல்லா காலத்திலும் எடுபடாது. 20 ரூபாய் நோட்டை பார்த்து ஏமாந்த மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வாழும் இந்த மண்ணில் எச்.ராஜா போன்றவர் நடமாடுவது சாபக்கேடு. போராட்டங்களால் சாதிக்க முடியாததை ஆட்சி மாற்றம் மூலம் தமிழக மக்கள் சாதித்து காட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்டு சந்தானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி கனியமுதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அல்டாப் உசேன், மனித நேய மக்கள் கட்சி அப்ராக் அகமது ஆகியோர் சிறப்புரையாற்றினர். தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் பஷீர் அகமது, துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் ராஜப்பா நன்றி கூறினார். #tamilnews #rsbharathi #edappadipalanisamy

Tags : attamil,tamilnews,indianews,rs bharathi, chief minister, edappadi palanisamy, திமுக, அதிகாரிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு