இடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு India News

States cannot appoint police officer as acting DGP, rules Supreme Court

இடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது. புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க தகுதியானவர்களின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ActingDGP

மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களது அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்படுபவர்களையுமே போலீஸ் டி.ஜி.பி.க்களாக நியமிப்பதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமித்து விட்டு, பிறகு பணிநீட்டிப்பு வழங்குவதாகவும் புகார் நிலவி வருகிறது. இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது கடந்த 2006-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்தது.

அவற்றில், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும்வகையிலும் அமைய வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும்.

போலீஸ் மீது மாநில அரசுகள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.

ஆனால், இந்த உத்தரவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்று கூறி, பா.ஜனதா பிரமுகர் அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுபோல், 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது.

டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.

அப்பெயர்களில், மிகவும் தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவருக்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பதவிக்காலம் மிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆகவே, போலீஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாநில அரசுகள் ஏதேனும் சட்டமோ, விதிமுறைகளோ வகுத்திருந்தால், அந்த சட்டமும், விதிமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

இருப்பினும், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.  #SupremeCourt #ActingDGP #Tamilnews 

Tags : States, cannot appoint, police officer, acting DGP, Supreme Court, இடைக்கால டி.ஜி.பி, நியமனம், மாநில அரசு, நியமிக்கக் கூடாது, சுப்ரீம் கோர்ட்டு, உத்தரவு